நல்லாட்சியின் வெளிப்படைத்தன்மைக்கு எடுத்தக்காட்டு க.கனகேஸ்வரன்

எமது இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட தன்னைச்சார்ந்த செய்தி தொடர்பாக பிரதேச செயலர் திரு.க.கனகேஸ்வரன் அவர்கள் தனது நிலைப்பாட்டினை வெளிப்படைத்தன்மையுடன் எம்முடன் பகிர்ந்துள்ளார்.

நல்லாட்சியின் வெளிப்படைத்தன்மையினை சிறப்பாக கடைப்பிடிக்கும் பிரதேச செயலர் அவர்கட்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதோடு முன்னர் எம்மால் பிரசுரிக்கப்பட்ட செய்தியானது முழுவதும் பொய்யான ஒரு செய்தியல்ல.

தங்களின் மென்மையான போக்கினையும் தங்களின் பதவியின் பெயரையும் பயன்படுத்தி ஒருசில கேடுகெட்ட மனிதர்கள் இன்று குளிர் காய்ந்து வருகின்றனர்.

தங்களின் கீழ் இடம்பெற்று வரும் சில வேலைத்திட்டங்களில் இன்னமும் குழறுபடிகள் நடந்தவண்ணமே உள்ளது.

அவற்றையெல்லாம் களைய வேண்டியது பிரதேச செயலராகிய தங்களின் தலையாய கடமை.

எது எவ்வாறெனினும் எம்மால் வெளியிடப்பட்ட செய்திக்கு தாங்கள் வழங்கிய பதிலினையும் இங்கு பிரசுரிக்க வேண்டியது எமது கடமை.

15.03.2017

மக்களின் முதுகில் சவாரிவிடும் மருதங்கேணி அரச அதிபர் கனகேஸ்வரனும் சில புல்லுருவிகளும் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாக பின்வரும் விடயங்களினை முன்வைக்க விரும்புகின்றேன்.வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் இருந்து ஏனைய பிரதேசங்களுக்கான மணல் விநியோகம் மிகவும் சீரான முறையில் இடம்பெற்று வருகின்றது. வடமராட்சி கிழக்கு பிரதேச பொது அமைப்புக்களான பிரதேச சபை, கிராம அபிவிருத்தி சங்கம் குடத்தனை வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவுச்சங்கம் வடமராட்சி கிழக்கு கடற்தொழில் கூட்டுறவு சமாசம் என்பனவற்றுக்கு பிரதேச செயலாளராகிய எனது சிபாரிசுடன் புவிச்சரிதவியல் கனியவளதிணைக்களத்தின் முறையான அனுமதியினை பெற்று மணல் விநியோகத்தினை மேற்கொண்டு வந்தன. கடந்த இருமாதங்களாக மண் குன்றுகளின் அளவு குறைவடைவதனால் பிரதேச சபை மற்றும் குடத்தனை கிராம அபிவிருத்தி சங்கத்திற்கான அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது ஒவ்வொரு அனுமதி பத்திரத்தின் கீழும் மாதாந்தம் 210 கியூப் மணல் விநியோகம் செய்ய முடியும் இதன்படி கடற்தொழில் சமாசத்திற்கு 3 அனுமதிப்பத்திரங்களும் வடமராட்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு 3 அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டு மணல் விநியோகம் செய்யப்படுகின்றது. இதற்குரிய மேற்பார்வை புவிச்சரிதவியல் சுரங்க பணியகத்தினாலும் பிரதேச செயலகத்தினாலும் மேற்கொள்ளப்படுகின்றது.

புவிச்சரிதவியல் சுரங்க திணைக்களத்தினால் பெறப்படும் அனுமதிப்பத்திரங்களுக்கு அமையஅனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் பொது அமைப்புக்களின் வடமராட்சி கிழக்கு உழவு இயந்திர உரிமையாளர் சங்கத்திடம் உழவுஇயந்திரங்களை பெற்று மணல் திட்டிலிருந்து மணலினை மணல் சேகரிப்பு இடத்திற்கு கொண்டு செல்லப்படும்

மணல் சேகரிப்பு நிலையத்திலிருந்து பயனாளிகளுக்கான விநியோகத்திiனை யாழ்மாவட்ட பாரவூர்திச்சங்கம் மேற்கொள்ளும்

மணல் தேவைப்படுவோர் தங்கள் தங்கள் பிரதேச செயலகமூடாக மணலுக்கு எமது பிரதேச செயலகத்திற்கு விண்ணப்பத்தை அனுப்புவார்கள் கிடைக்கும் விண்ணப்பங்களினை எமது பிரதேச செயலகம் தொகுத்து கணணியில் பதிவேற்றம் செய்த பின்னர் யாழ்மாவட்ட பாரவூர்திகள் சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்படும் பயனாளிகள் மணலுக்கான பணத்தினை பாரவூர்தி சங்கத்திடம் செலுத்திய பின்னர் குறித்த பயனாளிகளுக்கு மணல் விநியோகிக்கப்படும்.

மணல் விநியோகம் நிறைவுற்றதும் பாரவூர்தி சங்கத்தினர் தமது பாரவூர்தி கட்டணத்தினை எடுத்து விட்டு மிகுதி பணத்தினை காசோலை மூலம் மணல் அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் பொது அமைப்புக்களான கூட்டுறவுச்சங்கம் மற்றும் சமாசம் போன்றவற்றுக்கு அனுப்பிவைக்கப்படும். அவர்கள் உழவு இயந்திர கொடுப்பனவு ஏற்றுக்கூலி பிரதேச சபை வரி அனுமதிப்பத்திர வரி என்பனவற்றினை செலுத்திய பின்னர் ஏனைய பணத்தினை தமது வங்கி கணக்கில் சேமிப்பாக வைத்திருப்பார்கள் கிடைக்கப்பெற்ற தேறிய இலாபத்தில் 10 வீதம் பொது அமைப்புக்கு வழங்கப்படும் மிகுதி 90 வீதமான பணம் பிரதேச செயலகத்திற்கு காசோலை மூலம் வைப்பிலிடப்படும். வைப்பிலிடப்பட்ட பணம் விகித நடைமுறைக்கு அமைவாக மக்களினால் முன்னுரிமைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் அடையாளங்காணப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் அனுமதி பெற்று வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

நான் பிரதேச செயலாளராக பதவியேற்றபின் 1 1/2 வருட காலப்பகுதியில் 44 லட்சம் வரையான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு கிராம அலுவலகப்பிரிவுகளுக்கும் 4 இலட்சம் என்ற அடிப்படையில்ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது கூட 30 இலட்சம் ரூபா அளவிலான பணம் குடத்தனை கிராம அபிவிருத்திச் சங்கம், சமாசம், கூட்டுறவுச்சங்கம் என்பவற்றின் வங்கியில் வைப்பிலிடப்பட்டிருக்கின்றது. அப்பணத்திற்கும் விரைவில் வேலைத்திட்டம் நிறைவேற்றப்பட இருக்கின்றது.

வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சமாசத்தின் தலைமைப்பதவி நான் விரும்பிப் பெற்றதல்ல. சமாச முன்னால் தலைவர் மேற்கொண்ட சில முறைகேடுகள் காரணமாக கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரினால் பதவியிலிருந்து நீக்கப்பட்டு நானும் வேறு இருவரும் அப்பதவிக்கு கூட்டுறவு ஆணையாளரினால் நியமிக்கப்பட்டேன். பின்பு கூட்டுறவு ஆணையாளர் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய 14 நாட்கள் முன்னறிவித்தலுடன் 27.02.2017 அன்று பொதுக்கூட்டம் நடாத்தப்பட்டு புதிய இயக்குனர்சபை தெரிவு செய்யப்பட்டு அன்றைய தினமே புதிய இயக்குனர் சபையிடம் பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டன. சமாசப் பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டு 15 நாட்களின் பின் சமாசப் பொறுப்புக்கள் கையளிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாக தங்களின் செய்தியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு கடல் நீரினை நன்னீராக்கும் திட்டத்திற்கு பிரதேச செயலகத்தின் எந்தவொரு அனுமதியும் கோரப்படவில்லை. இத்திட்டம் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையினால் தாளையடி கிராம பொது அமைப்புக்களுடன் மேற்கொள்ளப்பட்ட பிரகாரம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இத்திட்டத்துடன் இணைந்த வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையினால் 127 மில்லியன் ரூபா வடமராட்சி கிழக்கின் அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்டது.

இவ் அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை பிரதேச செயலக மக்களின் முன்னுரிமைக் கோரிக்கைக்கமைவாக வேலைத்திட்டங்களை அடையாளம் கண்டு தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையினருக்கு தெரியப்படுத்தியுள்ளது. இதன் பிரகாரம் அபிவிருத்தி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனது 14 வருட இலங்கை நிர்வாக சேவையில் பல உயர் பதவிகளை வகித்து வந்திருக்கின்றேன். எனது ஒரே இலக்கு நேர்மையான ஊழலற்ற ஒரு சிறந்த பொதுமக்கள் சேவையாளனாக இருக்க வேண்டும் என்பதுடன் அதிலிருந்து இம்மியளவும் விலகாதவனாகவே வாழ்ந்து வருகின்றேன். இதற்கு என்னிடம் சேவைபெற்ற பொதுமக்கள் சாட்சியாக இருப்பார்கள்.

எனவே தங்களின் மதிப்புமிக்க இணையத்தளத்திற்கு எவ்வித அடிப்படையுமற்ற என்னைச் சார்ந்த செய்தி பிரசுரித்தமையினை மீள்பரிசீலனை செய்து அதனை நீக்கிவிடுமாறு தங்களை கேட்டுக்கொள்கின்றேன்.

திரு.க.கனகேஸ்வரன்
பிரதேச செயலர்
பிரதேச செயலகம்
வடமராட்சி கிழக்கு

ஒரு பிரதேச செயலராக இருந்து பதிலளித்ததிலிருந்து இவரது நேர்மை புலப்படுவதோடு ஏனையவர்களின் மௌனம் மேலும் சிந்திக்கத்தூண்டுகின்றது.

உண்மைகள் என்றும் உறங்குவதில்லை.

Facebook Comments

There is no ads to display, Please add some
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*