பேரிணையம், நலத்திட்ட நிதிகளை வழங்காததால் தொழிலாளர்கள் பாதிப்பு!

வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பேரிணையத்தில் உள்ள கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் சுமார் 3 கோடி ரூபா நிதியினை பேரிணையம் வழங்காததால், கிளிநொச்சி பனை தென்னை வள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1995 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அங்கத்தவர்களின் நாளாந்த கள் உற்பத்தியில் இருந்தும், சங்கத்தின் ஒரு தொகை பங்களிப்புடனும், வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்திக்; கூட்டுறவுச் சங்கங்களின் பேரிணையத்திற்கு அனுப்பிவைத்த சுமார் 3 கோடி ரூபா நிதியினை பேரிணையம் வழங்காத காரணத்தினால் அங்கத்தவர்களுக்கு நலத்திட்ட நிதிகளை வழங்க முடியாத நிலை காணப்படுகிறது.

கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தில் 650 பனை தென்னை வள தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு காப்புறுதித் திட்டம், விபத்து நிதித் திட்டம், ஓய்வூதியத் திட்டம் மற்றும் கல்வி மேம்பாட்டுத் திட்டம் ஆகிய நலத்திட்டங்களுக்கான கொடுப்பனவுகள் சங்கத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது, பேரிணையம் கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்திற்கு உரித்தான நிதிகளை வழங்காததால் தாம் குறித்த நலத்திட்டங்களை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயம் சம்பந்தமாக கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் எஸ்.துரைசிங்கம் அவர்களிடம் தொடர்புகொண்டுகேட்டபோது, தினந்தோறும் பல அங்கத்தவர்கள் அலுவலகத்திற்கு வருகை தந்து தமது நலத்திட்டங்களை வழங்குமாறு கோருகின்றனர். பேரிணையம் எமது சங்க அங்கத்தவர்களின் நிதியினை வழங்காததால் எமக்கு அதனை பெற்றுக்கொடுக்க முடியாத நிலை காணப்படுகிறது.

ஓய்வூதியக் கொடுப்பனவாக 85 பேருக்கு 13 இலட்சத்து 94 ஆயிரத்து 158 ரூபாவும், விபத்து முற்பணமாக 173 பேருக்கு 16 இலட்சத்து 14 ஆயிரத்து 888 ரூபாவும், தொழிற்படும்போது மரணமடைந்த 3 பேருக்கு மரணக்கொடையாக ஒருவருக்கு 5 இலட்சம் ரூபா வீதம் மூன்று பேருக்கும் 15 இலட்சம் ரூபாவும், கல்விக் கொடுப்பனவாக 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு 06 ஆம் மாதம் வரையிலான காலப்பகுதியில் மட்டும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு மாதாந்தம் ஒருவருக்கு ஆயிரத்து 500 ரூபா வீதம் 18 பேருக்கு 3 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாவும், பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மாதாந்தம் ஒருவருக்கு மூவாயிரத்து 500 ரூபா வீதம் 6 பேருக்கு 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவுமாக மொத்தம் 6 இலட்சத்து 57 ஆயிரம் ரூபா என மொத்த நலத்திட்ட நிதிகளாக 51 இலட்சத்து 66 ஆயிரத்து 46 ரூபா வழங்கப்படவேண்டியுள்ளது.

ஓய்வு பெற்ற அங்கத்தவர்களுக்கான மாதாந்த ஓய்வூதிய நிதியை வழங்க முடியாதுள்ளதுடன், முற்பணமாக வழங்கப்பட்ட நிதிகளின் கணக்குகளை முடிக்கமுடியாத நிலை காணப்படுகிறது. இந்த விடயம் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள் ஆகியோருக்கு நேரடியாகவும், எழுத்து மூலமும் தெரியப்படுத்தப்பட்டும் எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை என கவலை தெரிவித்துள்ளதுடன், இருவார காலத்திற்குள் தீர்வு கிடைக்காதுவிடின், 650 அங்கத்தவர்கள், 120 பணியாளர்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்களின் பிள்ளைகள் அவர்களின் பெற்றோர்கள், குடும்ப உறவுகள் என எல்லோரும் சேர்ந்து கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அலுவலகத்தினையும், குறித்த பேரிணையத்தினதும் அன்றாட செயற்பாடுகளை முடக்கும் வகையில் காலவரையறையற்ற தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

Facebook Comments

There is no ads to display, Please add some
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*