யாழில் கனடா தம்பதிகளின் 51 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருட்டு!

இலங்கையில் வைத்து சுமார் 51 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்து அதன் பிரதியை கனடா நாட்டில் ஒப்படைத்து பெருந்தொகை காப்புறுதிப் பணத்தினை பெற்றுக்கொள்ள கனடா தம்பதிகள் முயற்சி செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

89 பவுண் நகைகள் கொள்ளை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மிகவும் திட்டமிடப்பட்ட பொய் முறைப்பாடு என கொடிகாமம் பொலிஸாரின் இறுதி விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 ம் திகதி திங்கட்கிழமை வரணி பகுதியில் உள்ள வீடொன்றில் இரவு 8 மணியளவில் நுழைந்த திருடர்கள் சுமார் 51 லட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றதாக கனடா நாட்டில் இருந்து வந்திருந்த தம்பதிகளால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் அடுத்தநாள் முறையிடப்பட்டிருந்தது.

இதன்போது வீட்டிலிருந்த இரண்டு பெண்களில் கனடா நாட்டிலிருந்து வந்திருந்த பெண்ணின் நகைகள் மட்டுமே திருடப்பட்டிருந்ததாகவும் வீட்டிற்குள் நுழைந்த இரண்டு திருடர்கள் கத்தியைக் கழுத்தில் வைத்து அச்சுறுத்தியே கொள்ளையில் ஈடுபட்டிருந்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடு தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பீ.எதிரிசிங்க தலைமையில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, இந்த முறைப்பாட்டினால் கொடிகாமம் பொலிஸாருக்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உயர்மட்டத்திலிருந்து பாரிய அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

தொடர் விசாரணைகளின் போது இம்முறைப்பாடு தொடர்பாக 6 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

விசாரணைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு இறுதி விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் எதிர்வரும் 16 ம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொய் முறைப்பாடு வழங்கிய கனடா நாட்டில் இருந்து வருகை தந்த தம்பதிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறும் கொடிகாமம் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துகின்ற செயல் எனவும் வெளிநாடுகளில் இருந்து வருகின்றவர்கள் இவ்வாறு பொய் முறைப்பாட்டினை பதிவு செய்து காப்புறுதிப் பணத்தினை பெற்றுக்கொள்ள முயற்சிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொய் முறைப்பாடு செய்தவர்களை நீதிமன்ற உத்தரவின்றி மேலதிக நடவடிக்கைக்கு உட்படுத்த முடியாது.

எனினும் நீதிமன்ற அறிவுறுத்தலுக்கமைய இவ்வாறானவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*