வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய கப்பல் திருவிழா

அந்நிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான மக்கள் திரள் போராட்டத்தின் நினைவுதினமே வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய கப்பல் திருவிழா என பார்க்க வேண்டியுள்ளது. அக்காலத்தில் ஆலயங்களே மக்களின் நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்பாக இருந்ததால் அந்ந தினத்தை பக்தி மயப்படுத்திவிட்டனர் என கருத இடமுண்டு. இதனை பற்றிய ஆழமான ஆய்வு அவசியமானது. வழிபாட்டு தலங்களின் வரலாறு ஒரு சமுதாயத்தின் கதையை தன்னுள் அடக்கியுள்ளது. ஆனால் அதனை பகுத்தறிவு நோக்குடன் விஞ்ஞான பூர்வமான ஆய்வுக் கருவிகளுடன் மறுவாசிப்பிற்கு உட்படுத்த வேண்டும். நாகர்கோவில் எனும் பூர்வீக தமிழ்க் கிராமம் ஈழத்தின் நாகர் இனத்தின் கதையை தற்போதும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றது. இப் பகுதியில் விரவியிருக்கும் மணல் வெளி எங்கும் பழைய நாணயங்கள், மட்பாண்ட துண்டுகள் என பல தொல்பொருள் எச்சங்களை சாதாரணமாக காணமுடிகிறது. இனப்போர் அந்த கிராமத்தையும் தின்றுவிட்டது என்பது எம் துரதிர்ஷ்டமே.

கப்பல் திருவிழா என்பது வருடாந்தம் இந்த நாகதம்பிரான் ஆலயத்தில் ஒரு உற்சவமாக இடம்பெறுகிறது. அன்றிரவு விடியவிடிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று பின்னிரவு வேளையில் கோவிலின் வடக்கு பக்கம் உள்ள மணல்வெளியில் ஒரு திறந்தவெளி அரங்க ஆற்றுகையாக ஒரு கப்பலை மேடையில் வைத்து பலர் வெள்ளை நிறத்தை முகத்தில் பூசி கைகளில் ஆயுதம் போல தடியினை வைத்து சுழற்றி வெள்ளைக்கார கப்பல் படையினரைப்போல நடிப்பர்.

உண்மையான வரலாற்று நிகழ்வு என்னவெனில் ஈழத்தினை அந்நியர் ஆண்ட போது அவர்கள் இவ்வூரில் இருந்த இளைஞர்களை அடிமைகளாக பிடித்து இந்திய கோவா துறைமுகமூடாக தம் நாட்டிற்கு கொண்டுசெல்ல இருந்துள்ளனர். அதன்படி அவர்கள் இளைஞர்களை பிடித்து ஏற்றியபோது மக்கள் இதற்கெதிராக அழுது இரந்து வேண்டி இறைவனிடம் பழியிட்டு என தம் பிள்ளைகளின் விடுதலைக்காக போராடினர். இறுதியில் இளைஞர்களை விடுவிக்க வேண்டிய நிலை அந்நியர்களுக்கு ஏற்பட்டது. இது ஒரு ஐதீகமான வரலாறே.

இந்த கப்பல் திருவிழாவில் வேடமிட்ட நடிக வெள்ளைக்கார சிப்பாய்கள் பலரை சபையிலிருந்து வலிந்து கப்பலில் ஏற்றுவர். இறுதியில் கப்பலை கொண்டு இவர்கள் புறப்பட முற்படும்போது அது இயங்க மறுக்கும். அவர்கள் தலைமை மாலுமியின் வேண்டுதலுக்கு இணங்க அந்த பாய்க் கப்பலை சோதனையிடும் போது அப் பாய்மரத்தில் ஒரு பாம்பினை கண்டுவிடுவர். உடனே அவர்கள் பாம்பை வெட்டி வீழ்த்துவர். ஆனால் அந்த துண்டுபட்ட உடல்களும் பல பாம்பாக மாறி அவர்களை பயமுறுத்தும். இறுதியில் அவர்கள் அந்த குடியானவர்களை இறக்கிவிட்டு நாகதம்பிரானை வழிபட்டு செல்லுவர். இப்படித்தான் அந் மக்களின் போராட்ட வெற்றி நாள் நினைவுகூரப்படுகிறது. இதன்போது அவர்கள் அவ் அந்நியர்களின் மொழியில் பேசுவது, அதனை தமிழில் கூறுவது, இந்த நிகழ்வை பின்னணி பாடல்மூலம் இசைப்பது என எல்லாம் தனித்துவமாகவும் உயிர்ப்பாகவும் இருக்கும். இன்று இதற்காக பயன்படுத்தப்படும் கப்பலானது பல ஆண்டுகளுக்கு முன்னர் வல்வெட்டித்துறையை சேர்ந்த கடலோடி வணிகன் ஒருவரால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இந்த கப்பல் திருவிழாவில் ஒரு வெள்ளைக்கார துரையாக சின்ன வயதில் வேடமிட்டு நடித்தமை இனிய நினைவு. பேரா கணபதிப்பிள்ளை அவர்கள் நாகர்கோவில் பற்றி எழுதிய ஒரு பகுதியை இத்தோடு இணைக்கிறேன்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*