அக்கராயனில் உள்ள கரும்புத் தோட்டக் காணியைப் போராளிகளுக்கு (இது ஒரு போலி ஏற்பாடு) பகிர்ந்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு கடந்த சில தினங்களுக்கு முன்பு கிளிநொச்சியில் ஒரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டைச் செய்தவர் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் என்பது பகிரங்கமான தகவல்.
உண்மையில் போராளிகளின் மீது அளவற்ற அக்கறையுடன் இதை அவர் செய்திருப்பார் என்றால், இதையும் விட வசதியான, வளமான காணி ஒன்று கிளிநொச்சி நகர்ப்பகுதியான திருவையாறில் உள்ளது. அதைப் போராளிகளுக்குப் பகிர்ந்தளிக்க ஏற்பாடு செய்திருக்க வேண்டுமே! ஏன் அதைச் செய்யவில்லை சிறிதரன்? என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தக் காணியின் அளவு சுமார் 14 ஏக்கர். இதில் 10 ஏக்கர் விடுதலைப்புலிகளுக்குச் சொந்தமானது. காணி உரிமையாளர்களிடமிருந்து புலிகள் இதைப் பணம் கொடுத்து வாங்கியிருந்தனர். அத்துடன் ஏனைய நான்கு ஏக்கர் நிலத்தையும் அவர்களே தமது பயன்பாட்டில் வைத்திருந்தனர். அந்த நான்கு ஏக்கர் நிலத்துக்கும் அவற்றின் உரிமையாளர்கள் தற்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பொழுது அந்த நான்கு ஏக்கர் தவிர்ந்த மீதியான 10 ஏக்கர் நிலமும் புலிகளால் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்களோடு சுவிஸ் நாட்டிலுள்ள கோடீஸ்வரர் ஒருவருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாட்டைச் செய்திருப்பவர் சிறிதரன். ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் என்ற அடிப்படையில் இதை அவர் செய்திருக்கிறார். இந்தக் கோடீஸ்வரன் கிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதியிலும் பெருமளவு அரச காணியை முதியோர் இல்லமொன்றின் பேரில் கையகப்படுத்தி வைத்துள்ளார். இதற்கு வாய்ப்பாக உள்ளுரில் சில கையாட்களையும் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்தக் கோடீஸ்வரர் திருவையாறில் கையகப்படுத்தியுள்ள காணியில் ஒரு சிறுவர் இல்லம் ஆரம்பித்து நடத்தப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தின் விதிமுறைப்படி புதிய சிறுவர் இல்லங்களை கண்டபடி உருவாக்க முடியாது. ஆகவே, இதற்கென தந்திரமான ஏற்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.
இதன்படி விடுலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனால் ஆரம்பித்து நிர்வகிக்கப்பட்ட “காந்தரூபன் அறிவுச்சோலை” என்ற சிறுவர் இல்லத்தின் பதிவைப் பயன்படுத்தி இந்தச் சிறுவர் இல்லத்துக்கான அனுமதியைப் பெற்றுள்ளார் இந்தக் கோடீஸ்வரர். இவருடைய நோக்கம் உண்மையில் சிறுவர் இல்லத்தை நடத்துவதல்ல. அதற்கான தேவையும் தற்போது வன்னியில் இல்லை. பதிலாக, இந்தச் சிறுவர் இல்லத்தின் பேரில் கிளிநொச்சி நகர்ப்பகுதியில் 14 ஏக்கர் நிலத்தைப் பெறுவதேயாகும். இந்தப் 14 ஏக்கர் நிலமும் 10 கோடி ரூபாய்க்கு மேலான பெறுமதியுடையது.
இதை குறிப்பிட்ட நபர் கையகப்படுத்துவதற்கு உதவியிருக்கும் சிறிதரனுக்கு தாரளமான உதவிகளை இந்தச் சுவிஸ் பிரமுகர் செய்து வருகிறார். இது சுவிஸ் குமாரைப்போல இன்னொரு சுவிஸ் பிரமுகரின் கைவேலைக் காலமாகும்.
மெய்யாகவே போராளிகளின் மீதான அக்கறையும் மதிப்பும் சிறிதரனுக்கு இருந்திருக்குமானால், திருவையாறுக் காணியை சுவிஸ் பிரமுகரிடமிருந்து மீட்டெடுத்து அவற்றைப் போராளிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அதையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதுவே நீதியானதும் கூட. இதைச் செய்வாரா சிறிதரன்?
இதைக்கறித்து சிறிதரனுக்கான அழுத்தத்தை அவருடைய ஆதரவாளர்களும் விசுவாசிகளும் நியாயமான சமூக அக்கறையுடையோரும் கொடுப்பார்களா?
Hits: 0