மீற்றர் வட்டியில் பணம் வசூலிப்பவர்களுக்கு நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி..!!

வழங்கிய பணத்தை நீதிமன்றின் ஊடாக வசூலிப்பதும் தவறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்
இன்று வழங்கிய தீர்ப்பில் கோடிட்டுகாட்டினார்.

“மீற்றர் வட்டி, பிரமிட் வட்டி என்பன சட்டவிரோதமாவை. காசோலைக்கு பணம் வழங்குவதும் சட்டவிரோதமானது. அந்தப் பணத்தை மோசடியாக நீதிமன்றில் வழக்குப் போட்டு மீளப்பெறுவதும் தவறு. மீற்றர் வட்டிக்கு சட்டத்தரணிகள் அல்லது நொத்தாரிசுகள் வழங்கும் உடன்படிக்கைகளும் சட்டவிரோதமானவை. வங்கிகளால் அறவிடப்படும் அல்லது வழங்கப்படும் வட்டிகளே சட்டபூர்வமானவை”

இவ்வாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று வழங்கிய தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இத்தகைய சட்டவிரோத செயற்பாட்டால் ஒரு குடும்பமே காவு கொள்ளப்பட்டது. எதுவுமே அறியாத பச்சிளங்குழந்தைகள் இறந்துபோனார்கள். இது ஒரு வாழ்க்கைப் பாடமாகும்” என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம், சுதுமலையில் சினிமா படமாளிகை அமைப்பதற்காக 47 இலட்சத்துக்கு 85 ஆயிரம் ரூபா பணம் ஒருவரால் பெறப்பட்டுள்ளது. அவர் படமாளிகைக்கான பொருள்களை வழங்காது இழுத்தடித்துவிட்டு காசோலைகளை வழங்கியுள்ளார். அவை கணக்குகள் மூடப்பட்ட காசோலைகள். இதனால் பாதிக்கப்பட்ட நபர் பொலிஸார் ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டநிலையில் காசோலையை வழங்கியவர் பணத்தை வழங்கவேண்டும் அல்லது 2 ஆண்டுகள் சிறைதண்டனையை அனுபவிக்கவேண்டும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பிலேயே நீதிபதி இளஞ்செழியன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“மீற்றர் வட்டி, நாள் வட்டி, மாத வட்டி, மற்றும் பிரமிட் வட்டி என்பன சட்டவிரோதமானவை. அவை தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தொடர முடியாது. வட்டிக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் அல்லது அடகு பிடிக்கும் நிறுவனங்கள் கடன் வழங்கல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

வங்கிகள், நிதி நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்டவை. அவற்றை கண்காணிக்கும் பொறுப்பு மத்திய வங்கி ஆளுநரிடம் உண்டு. நிதி நிறுவனங்கள் அதிக வட்டிக்கு கடன் வழங்கினால் மத்திய வங்கிதான் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

காசோலை வழங்கிக் கொண்டு பணத்தை வட்டிக்கு வழங்குவது, அந்தக் காசோலை திரும்பியதும் நீதிவான் மன்றில் வழக்குப் போடுவதும் நாளாந்தம் இடம்பெறுகின்றன. காசோலையை வாங்கிக் கொண்டு பணம் வழங்குவது சட்டத்துக்கு முரணானது. திரும்பிய காசோலைக்கு மோசடியாக நீதிவான் மன்றில் வழக்குத் தாக்கல் செய்து பணத்தை மீளப் பெறுவதும் தவறானதே.

அவ்வாறு திரும்பிய காசோலை தொடர்பில் சிவில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து அங்கு “பிரதிபலன்” எண்பிக்கப்படவேண்டும்.

மீற்றர் வட்டிக்கு பணம் வழங்குவது சட்டவிரோதம். அதேபோன்று அந்தப் பணத்தை மோசடியாக நீதிமன்றின் ஊடாக மீளப்பெறுவது சட்டவிரோதமானது. தற்கொலை செய்யக் கூடாது. தற்கொலை செய்யத் தூண்டவும் கூடாது. தற்கொலை செய்யத் தூண்டுவதும் குற்றமாகும்” என்று மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

Facebook Comments

There is no ads to display, Please add some
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*