கூட்டமைப்பின் சிதைவு கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்பார்கள். இந்நிலையே இன்று தமிழர் அரசியல் அரங்கில் சூடுபிடித்து நடந்தேறி வருகின்றது. தேசியம், சுயநிர்ணயம், தாயகம் என்ற தேர்தல் கால வார்த்தைகள் எல்லாம் கப்பலேறி, கட்சி நலன்சார்ந்த விடயங்களை முன்னிறுத்திப் பேரம் பேசும் தன்மை மேலோங்கி வருகின்றமை, வேதனைக்குரிய விடயமாகவே, தமிழ் மக்கள் பார்க்கின்றனர்.

சிங்கள மேலதிக்க அரசியலாளர்களின் கைங்கரியங்களைச் செவ்வனே செய்வதற்கு, தமிழர் தரப்பில் உள்ள சில அரசியல் தலைமைகள் ஈடுகொடுத்துப் போவதால் ஏற்பட்டுள்ள இந்நிலைமையானது, நிம்மதியான வாழ்வு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுடன் கூடிய பொருளாதார உயர்ச்சியை, எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்களுக்குச் சலிப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்திவருகிறது.

காலத்துக்குக் காலம், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திலும் சரி, அரசியல் செயற்பாட்டிலும் சரி, பிளவுகளும் துரோகங்களும் வந்து சென்றவையாகவே உள்ளன.

அப்போதெல்லாம், தமக்கான மிகப்பெரிய பலமொன்று இருப்பதாக எண்ணிய தமிழர்கள், 2009 க்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஓர் அரசியல் தளத்தையே, தமது பலமாக எண்ணியிருந்ததை மறுக்க முடியாது.

அதன் ஒரு பிரதிபலிப்பாகவே, ஜனாதிபதித் தேர்தல்களில் சரத்பொன்சேகாவுக்காகவும் மைத்திரிபால சிறிசேனவுக்காகவும் வாக்களித்திருந்ததைக் கூறலாம்.

எனினும், அவ்வாறான நிலைப்பாடுகளை மக்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு, நம்பிக்கையின் சின்னமாத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கொண்டு செல்ல எத்தனித்தபோதே, பிளவுகள் அரங்கேறத்தொடங்கியுள்ளன.

பிரித்தாளும் தந்திரம் கொண்ட, தென்னிலங்கையின் செல்வாக்கு மிக்க கட்சிகள், தமிழ் அரசியல் கட்சிகளைப் பிரித்தாளுவதற்குக் கடும் பிரயத்தனம் மேற்கொள்ளவேண்டிய தேவையில்லை.

பெரும் கட்டமைப்பாக சர்வதேசமே வியந்த விடுதலைப் போராட்ட அமைப்பையே, பிரித்தாண்ட அரசியல் தலைவர்களுக்கு, தமிழ் அரசியல்வாதிகள் ஒரு பொருட்டேயில்லை, என்னும் அளவுக்கே தற்காலநிலை காணப்படுகின்றது.

இடைக்கால அறிக்கையும் அதனோடிணைந்த கருத்தியலும் தமிழர் அரசியல் செயற்பாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தும் என எவரும் எதிர்பார்த்திராத நிலையில், இடைக்கால அறிக்கையுடன் சேர்ந்த சம்பவங்கள் இன்று பூதாகாரமாகியிருக்கின்றன.

விட்டுக்கொடுப்பின்மையும், தான் சார்ந்த கட்சி நலனும் மேலோங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எவ்வாறு கூட்டு நிலைபேறு தன்மை கொண்டமையும் என்ற கேள்வி இருந்தாலும் கூட, தமிழ் மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்காக, அவர்கள் ஒர் அணியாகச் செயற்படுவார்கள் என்ற அவா தமிழ் மக்கள் மத்தியில் நிறையவே காணப்பட்டது.

எனினும், காலப்போக்கில் அவை கானல் நீராகிப் போகின்றபோதும், அரசாங்கத்துக்கு முண்டு கொடுக்கும் செயற்பாடு, ஆழமான கட்டத்தை அடைந்து, எதுவும் இல்லாத அரசமைப்புத் திணிக்கப்படுமா என்கின்றபோதே, தமிழ் மக்களும் தமது அரசியல் வெளியை நிரப்பிக்கொள்ள, புதிய அணியை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளனர்.

ஆனால், அவ்வணி வட மாகாண முதலமைச்சர் தலைமையில் உருவாகுவதை விரும்பிய தமிழ் மக்கள், ‘தமிழ் மக்கள் பேரவை’ அதைக் கையாளும் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தனர்.

எனினும், அதன் இணைத்தலைவரான வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கத் தயங்கியிருந்தார். ஏனெனில், தான் எடுக்கும் அவ்வாறான மாறுபட்ட நிலைப்பாடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து, சின்னாபின்னமாகியது தான் என்ற வரலாற்றுப்பழி, தன் மீது விழுந்து விடக்கூடாது என்பதிலும் அவர் கொண்ட கரிசனை, தமிழ் மக்கள் பேரவையை இன்றுவரை மக்கள் இயக்கமாகவே இயங்கச் செய்து வருகின்றது.

எனினும், நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பேரவையின் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, அரசாங்கத்துக்கு வக்காளத்து வாங்கும் அரசியல் தலைவர்களுக்கு, மக்களை வாக்களிக்கச் செய்வதனூடாக, மக்களைப் பிழையான வழியில் கொண்டு செல்வதா என்ற கேள்வி, அங்கு முக்கிய இடம்பிடித்தமையினால், பேரவைக்குள் சில மாற்றங்களைக் கொண்டுவரவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

வெறுமனே, மக்கள் இயக்கமாகச் செயற்படுவதனூடாக மாத்திரம், அழுத்தத்தைப் பிரயோகிக்க முடியுமா அல்லது பேரவையின் அழுத்தத்துக்குத் தற்போதைய தமிழ் தலைமைகள், செவிசாய்க்குமா என்ற கேள்விகள் நிறையவே உண்டு.

எனவேதான், மக்கள் நலன்சார்ந்த, நிலையான, தமிழ் மக்களின்பால் கரிசனைகொண்ட கொள்கையுடன், பயணிக்கக்கூடிய அமைப்புக்கு ஆதரவை வழங்குவதனூடாக, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தமது அரசியல் கன்னிப்பயணத்தை ஆரம்பிக்கப் பேரவை தீர்மானித்துள்ளது.

இதற்கு ஏற்றாற்போல், பேரவையின் கூட்டம் முடிந்ததன் பின்னர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் இணைந்து தாம் புதிய கூட்டணியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலைச் சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, பேரவையின் பங்களிப்புடன் சிவில் சமூகப் பிரதிநிதிகளை உள்ளடக்கியே புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், “நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில், அப்புதிய கூட்டணி போட்டியிடும். அது தொடர்பில் மக்கள் பேரவை, உத்தியோகபூர்வ முடிவை, இன்னும் ஓரிரு நாட்களில் எடுத்து, உத்தியோகபூர்வ அறிக்கை ஊடாக, அதை வெளிப்படுத்தும்” எனவும் தெரிவித்துள்ளனர்.

இடைக்கால வரைபை வைத்து, அரசியல் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரான சிவசக்தி ஆனந்தனுக்கு நாடாளுமன்றத்தில் பேசும் வாய்ப்பை அளிக்காது விட்டமை, அந்த விரிசலை மேலும் பன்மடங்காக்கியுள்ளது.

குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஆதிக்கம் செலுத்தும் தமிழரசுக்கட்சி, கூட்டமைப்பை விட்டு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வெளிச்செல்ல வேண்டும் என்ற மறைமுகக் காய்நகர்த்தல்களைச் செய்து வந்ததன் வெளிப்பாடே, நாடாளுமன்றத்தில் பேச்சுரிமை மறுப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது தமிழரசுக்கட்சி அரசாங்கத்துடன் இரகசிய சம்பந்தம் வைத்து, பல்வேறு காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வரும் நிலையில், அரசாங்க விரோதக் கருத்துகளைக் கொண்டுள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி போன்ற கட்சிகள், தம்முடன் பங்காளிகளாக இருப்பதை அவர்கள் விரும்பியிருக்கவில்லை.

டெலோ மற்றும் புளொட் போன்ற தமிழரசுக்கட்சிக்கு ‘ஆமா’ப் போடும் அல்லது அவர்கள் கூறுவதை ஒத்தோதக்கூடிய பங்காளிகளைத் தேடும் தமிழரசுக்கட்சிக்கு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பாகற்காயாகவே இருக்கும்.

இந்நிலையே, இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து, மற்றுமொரு கட்சி வெளியேறக் காணரமாகியிருக்கின்றது. இதற்குமப்பால், இந்தப் பிளவு, தமிழர்களின் அரசியல் உரிமைக்கான நெடுந்தூர பயணத்தில், ஓரு தடைக்கல்லாகவும் அமைந்துள்ளது.
குறிப்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளுடன் உடன்படாத நிலையில், அக்கூட்டில் இருந்து வெளியேறி, தனித்து நின்று வெற்றி பெறமுடியாத நிலையில், புதிய வியூகங்களை வகுக்க வேண்டிய தருணம் ஏற்பட்டிருந்தது. இதற்கான சந்தர்ப்பமாக, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னிணியின் வெளியேற்றத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டுள்ளது எனலாம்.

ஏனெனில், இரு கட்சிகளும் புதிய கூட்டணியை அமைத்துக் கொண்டாலும், அதற்கான பதிவு மற்றும் சின்னம் என்பவற்றைப் பெறுவதில் நடைமுறைச் சிக்கல்கள் நிறையவே உள்ளது.

இந்நிலையில், நீண்ட அரசியல் அனுபவத்தையும் போராட்ட அனுபவத்தையும் கொண்ட சுரேஷ் பிரேமச்சத்திரன், புதிய சின்னத்தில் போட்டியிடுவோம் என தெரிவிப்பது வேடிக்கையானதாகவே, தற்போது காணப்படுகின்றது.

தேர்தல் திணைக்களத்தில் புதிய கட்சிப் பதிவுகள், அதற்கான சின்னம் வழங்கும் செயற்பாடுகள், சட்டரீதியாகச் சாத்தியமற்ற நிலை காணப்படும்போது, இக்கூட்டணியானது பதிவு செய்யப்பட்ட தமது கட்சிகளின் சின்னமான, ‘பூ’ அல்லது ‘சைக்கிள்’ ஆகிய சின்னங்களில் ஒன்றிலேயே போட்டியிட வேண்டியநிலை உள்ளது.

ஆனால், ‘பூ’ சின்னமானது, தமிழ் மக்கள் மத்தியில் பரீட்சயமில்லாத நிலையில், சைக்கிள் சின்னத்திலேயே போட்டியிட வேண்டிய ஏதுவான நிலை உள்ளது.

ஆகவே, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வெளியேற்றத்தை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது கட்சியின் நலன் சார்ந்து பயன்படுத்தி, சைக்கிள் சின்னத்தில் கேட்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

எனினும், அதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உடன்படாத பட்சத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ‘உதயசூரியன்’ சின்னத்தை மூத்த அரசியல்வாதியான ஆனந்தசங்கரியிடம் இருந்து பெற்று போட்டியிட வேண்டியநிலை ஏற்படும்.

தற்போதைய நிலையில், தமிழர் விடுதலைக் கூட்டணியும் தம்முடன் இணைந்து போட்டியிட, ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இக்கூட்டு சாதகமாகப் பரிசீலிக்கப்படவுள்ளது.

‘உதயசூரியன்’ சின்னமானது, தமிழ் மக்கள் மத்தியில் பரீட்சயமானது. எனினும், அதன் கடந்தகால செயற்பாடுகள், தமிழ் மக்கள் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தமையினால், அதற்கான ஆதரவு சாத்தியமா என்பது ஆராயப்படவேண்டும்.

அதற்குமப்பால், கடந்து வந்த தேர்தல்களில் வீட்டுச்சின்னத்தைப் பழக்கப்படுத்திய கட்சிகள், தற்போது வேறு சின்னத்தில் போட்டியிடுகின்ற போது, மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஏனெனில், குறிப்பாக அரசியலாளர்கள் எண்ணுகின்ற நகரத்து அரசியல், தேர்தலின் முடிவை நிர்ணயித்து விடுவதில்லை. கிராமிய வாக்குகளே, கடந்த காலத் தேர்தல்களில் அதிகளவாகப் பதிவாகியுள்ளதுடன், அவையே மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவும் செய்துள்ளன.

இந்நிலையில் புதிய கூட்டாகவும் மக்கள் மத்தியில் பரீட்சயமில்லாத சின்னமும் எந்தளவு தூரம், சுரேஷ் – கஜேந்திரகுமார் கூட்டுக்கு வலுசேர்க்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இந்நிலையில், சர்வாதிகார போக்குமிக்க தமிழரசுக் கட்சி என்ற கருத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாலேயே மேடைபோட்டுத் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழரசுக் கட்சிக்குள் இருந்தே அதன் அதிருப்தியாளர்கள், ‘ஜனநாயகத் தமிழரசுக் கட்சி’ என்ற புதிய அணியை உருவாக்கியுள்ளனர்.

இவ்வணியில் உள்ளவர்கள் வெறுமனே அரசியல் செயற்பாட்டாளர்கள் அல்ல; சமூகச் செயற்பாட்டாளர்கள், கருத்தியலாளர்கள். அரசியல் செயற்பாட்டுக்கப்பால், மக்கள் பணியாளர்களை உள்ளடக்கிய ஓர் அமைப்பாக உருவாக்கம் பெறுகின்றது.

எனவே, இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஆதிக்கம் செலுத்தும் தமிழரசுக் கட்சிக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பது மாத்திரமல்ல, அக்கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டாலும் சேர்ந்தியங்க வேண்டும் என்ற நிலைப்பாடுடையவர்களுக்கு புதிய பாதையையும் அமைத்து கொடுத்திருக்கின்றது.

ஏனெனில், இவ்அணியினர் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் சிற்றம்பலம் அல்லது மறவன்புலவு சச்சிதானந்தத்தைத் தலைமையாகக் கொண்டு அமையவிருக்கிறது என்பது மத்திரமல்ல; வீரியமான செயற்பாட்டளர்களையும் கொண்டுள்ளதால் ஓரிரு வாரத்தில் உத்தியோகபூர்வமாகத் தம்மைப்க புதிய கட்சியாக அறிவிக்கவும் உள்ளார்கள்.

ஆனாலும், ஜனநாயக தமிழரசுக் கட்சியானது தமது தாய்க்கட்சியை விமர்சிப்பதற்கும் அதற்கு ஏதுவான காரணங்களை முன்வைக்கவும் சற்று கடினமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழ் மக்கள் மத்தியில் வீரப்பேச்சா? வேலைத்திட்டமா? என்கின்ற இரு தளத்தில் கணிசமான வாக்குகளைக் கொண்டுள்ள கிராமிய மக்களிடம், எது எடுபடப்போகின்றது என்பதே தற்போதைய கேள்வியாகவுள்ளது.

வீதி அபிவிருத்தியின்மை, நிரந்தர வீடின்மை, ஜீவனோபாயத்துக்கான ஏக்கங்கள் நிறைந்த கிராமிய மக்களிடம் கோசங்களும் வேசங்களும் எடுபடாத நிலையில், எவ்வாறான நிலையில் புதிய அணிகள் வெற்றி என்ற இலக்கை நோக்கிச் செல்லப்போகின்றன.

இந்நிலையில் தமிழர்கள் எதிர்பார்த்துள்ள அரசியல் தீர்வு என்ற விடயத்தை நோக்கி நகரவேண்டிய தமிழ்த் தலைமைகள் இரண்டாக, மூன்றாகப் பிரிந்து, தமக்குள்ளேயே காழ்ப்புணர்வுகளை மேடைபோட்டு கூறப்போவதால், கொட்டமடித்துக் கொண்டாடப்போவது தமிழர்கள் அல்ல; இந்நிலையை எதிர்பார்த்திருந்த இனவாத சக்திகளேயாகும்.

வெறுமனே கட்சி அரசியல் என்ற வட்டத்துக்குள் தம்மை சுருக்கிக்கொண்ட தமிழ்த் தலைமைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கம் செய்யப்பட்ட கூட்டை பதிவுக்குட்படுத்தியிருந்தால் இன்று ஜனநாயகம் மிக்க ஓர் அணியாகச் செயற்பட்டிருக்கும்.

எனினும், அதைவிடுத்துத் தனிநபர் அரசியலும் கட்சி அரசியலும் தமிழர் எதிர்கால அரசியல் செயற்பாட்டைச் சூனியமாக்கப் போகின்றது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
மஹிந்த காலத்தில், தமிழ் மக்களின் வாக்குகளை உடைப்பதற்காக, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தமிழ் விரோத சக்திகள் வடக்கு, கிழக்கில் எவ்வாறு ஆயுத ரீதியாகப் போரிட்டு, ஜனநாயக வழிக்கு திரும்பிய இயக்கங்களைப் பிரித்து, தாம் தலைவர்களாக ஆகிக்கொண்டார்களோ, அதே போன்றதான நிலையை, மீண்டும் தமிழர் தரப்பு எதிர்கொண்டுள்ளது.

‘சாண் ஏற முழம் சறுக்கும்’ நிலையாகிப் போயுள்ள அரசியல் ரீதியான முன்னகர்வுகள், இன்று படுபாதாளத்தில் விழும் நிலைக்கு வந்துள்ளமையைத் தமிழர் தரப்பு அரசியல் தலைமைகள் எனத் தம்மைப் பெருமைப்படுத்திக் கொள்ளும் அரசியலாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

வெறுமனே இடைக்கால அறிக்கையோடும் தேர்தல்களோடும் தமிழர்களின் அபிலாஷைகளும் எதிர்காலமும் முடங்கிப்போகும் விடயமல்ல; நீண்ட நெடிய பயணத்தை மேற்கொள்ள வேண்டிய தேவையை முன்வைத்தே தமிழர்கள் அல்லும்பகலும் நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.

தமக்கான பாரிய சக்தி இழக்கப்பட்டதன் பின்னர், திடமாக நம்பிய அரசியல் பலம், பிரித்தாளும் தந்திரமிக்க ஆட்சியாளர்களின் கைகளில் சிக்கி, சின்னாபின்னமாவதைத் தடுக்க ஆயர் தலைமையிலான குழு முயன்றபோதிலும், அதுவும் சாத்தியமற்றுப் போயுள்ளமை வேதனைக்குரியதே.

எனவே, மக்கள் தமது வாக்குபலம் கொண்டு தமது அரசியல் அபிலாஷைகளை நிலைநிறுத்த வேண்டிய கடமை அடுத்து வரும் தேர்தல்களில் நிறைவே உண்டு. அதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பையா புதிய கூட்டணிகளையா தமிழர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர் என்பது வெளிச்சத்துக்கு வரும்.

Facebook Comments

There is no ads to display, Please add some
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*