சிறுப்பிட்டி கிந்துப்பிட்டி மாயனத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கான தடை நீடிப்பு

புத்தூர் மேற்கு, சிறுப்பிட்டி கலைமதி கிந்துப்பிட்டி மாயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை எதிர்வரும் பெப்ரவரி 21ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நீடித்துள்ளது.

புத்தூர் கலைமதி கிராமத்தில் உள்ள மயானத்தை அகற்றுமாறு மயானத்தை சூழ வசிக்கும் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

அதேவேளை குறித்த மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என ஒரு பகுதியினர் மல்லாகம் நீதிமன்றை நாடி இருந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த மல்லாகம் நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், மயானத்தை சூழ பத்தடி உயர மதிலைக் கட்டி , சடலங்களை எரியூட்டுமாறும் , ஒரு வருடகாலத்துக்குள் மின்தகன மயானமாக அதனை மாற்றுமாறும் கட்டளையிட்டிருந்தார்.

மல்லாகம் நீதிவான் மன்றின் கட்டளைக்கு ஆட்சேபனை தெரிவித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மயானத்தை சூழவுள்ள மக்கள் சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனு யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் கடந்த செப்ரெம்பர் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

அதன் போது மயானத்தை சூழவுள்ள மக்களும் மன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். மனுவை விசாரணை செய்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி, ‘அந்த மயானத்தை அனுமதிப்பதா, நிரந்தரமாக அகற்றுவதா? என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சருக்கு உண்டு.

அந்தப் பகுதியில் வாழும் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க மன்று பணிக்கிறது. இந்த வழக்கு முடிவுறும்வரை கிந்துப்பிட்டி மயானத்தில் சடலங்களை எரியூட்ட தடை விதிக்கப்படும்’ என்று கட்டளை வழங்கினார்.

அத்துடன், யாழ்.மாவட்டச் செயலாளருடைய பங்களிப்புக்கள் இதில் எவ்வாறு உள்ளன. அவரால் வழங்கப்படக்கூடிய தகவல்கள் தொடர்பாகவும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் மன்று உத்தரவிட்டிருந்தது. மன்றின் உத்தரவுக்கு அமைய யாழ். மாவட்ட செயலர் சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. அதன் போது, மனுவின் இடைபுகு மனுதாரராக மற்றொரு தரப்பு ஆவணங்களை இணைத்து தம்மையும் இந்த வழக்கில். இணைத்துக் கொள்ளுமாறு மன்றில் விண்ணப்பம் செய்தனர்.

இடைபுகு மனுதாரரை இணைப்பது தொடர்பான மனுதாரரின் ஆட்சேபணையை முன்வைப்பதற்கு எதிர்வரும் பெப்ரவரி 21ஆம் திகதிவரை கால அவகாசத்தை வழங்கிய யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், அன்றைய தினம்வரை வழக்கு விசாணையை ஒத்திவைத்தார்.

அத்துடன், கிந்துப்பிட்டி மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு அனுமதித்து மல்லாகம் நீதிவான் மன்றம் வழங்கிய கட்டளை மீதான இடைக்காலத் தடையும் வரும் பெப்ரவரி 21ஆம் திகதிவரை மேல் நீதிமன்றால் நீடிக்கப்பட்டது.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*