ஏன் புகையிலை பயிர்ச்செய்கையை தடை செய்கிறார்கள் என்று புரியவில்லை

யாழ்ப்பாணத்து புகையிலைக்கு உள்ளூரில் மட்டுமல்ல, வெளி மாவட்டங்களிலும் பெரிய அளவில் கேள்வி உண்டு, ஏற்றுமதி கூட இடம்பெறுகின்றது. இலங்கையின் வடபகுதியில் பாரிய அளவில் புகையிலைப் பயிர்ச் செய்கை இடம்பெற்று வருகின்றது. இந்த பயிரைப் பொறுத்தவரை விவசாயிகளிடையே வருமான உத்தரவாதமுள்ள ஒரு பயிராகவே காணப்படுகிறது. மழை, பூச்சி போன்றவற்றால் ஏற்படக்கூடிய தாக்கத்தை தாண்டி, அதிக இலாபம் ஈட்ட முடியாவிட்டாலும் பாரியளவில் நட்டத்தை ஏற்படுத்தாத பயிராகவே புகையிலையை விவசாயிகள் பார்க்கிறார்கள்.

அவ்வாறான உத்தரவாதம் உள்ள பயிர் ஒன்று தடை செய்யப்படும் இடத்து, அதற்கு மாற்றுப் பயிராக வேறொரு பயிரை அறிமுகம் செய்யவேண்டியதும் தடைசெய்பவர்களின் கடமை என்கிறார் குறித்த விவசாயி. தற்போது உருளைக்கிழங்கு தான் அவ்வாறான மாற்றுப் பயிர் என்ற பேச்சு இங்கு பரவலாக காணப்படுகிறது, ஆனால் அது புகையிலை அளவுக்கு உத்தரவாதமான பயிரா என்றால், அது கேள்வி குறியே.

ஒவ்வொரு முறையும் உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கைக்கு தேவையான விதைகளை வெளியில் வாங்க வேண்டிய தேவை உள்ளது, அவ்வாறு வாங்கும் போது, விதைக்கான செலவீனம் ஒன்று மேலதிகமாக, பயிர்ச்செய்கையில் உள்ள செலவுகளிலேயே அதி கூடிய செலவாக அமைகிறது.

அதுமட்டுமல்ல, ஒவ்வொரு தடவையும் விதை உருளைக்கிழங்குகளை வாங்கும் போதும், விதை உருளைக்கிழங்கின் விலை அவற்றை விற்கும் நிறுவனங்களில் தங்கி இருக்கும். அவ்வாறு வாங்கப்படுகின்ற போது விதை உருளைக்கிழங்கின் விலைக்கு ஏற்ப அறுவடையின் பின்னர் உருளைக்கிழங்கை விற்க வேண்டிய தேவை ஏற்படும். ஆனால் நாட்டின் வேறு பகுதிகளில் இருந்து சந்தைக்கு கொண்டுவரப்படும் சாதாரண உருளைக்கிழங்கின் விலையுடனும், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் விலையுடனும் இவர்களால் போட்டியிட முடியாது.

யாழ்ப்பாணத்தில் உருளைக்கிழங்கை விதைத்த விவசாயிகள் தற்போது இந்த பிரச்னையை எதிர் நோக்குகிறார்கள். சந்தையில் உருளைக்கிழங்கு மலிவாக உள்ளதால் தங்களது கிழங்கு பயிரை அறுவடை செய்யாமல் காலம் தாழ்த்துகிறார்கள், ‘விலை ஏறும், அதன் பின்னர் அறுவடை செய்யலாம்’ என்று, ஆனால் இது அபாயமானது, முற்றுமுழுதாக நட்டப்படக்கூடிய சாத்தியமுள்ளது.

மேற்கூறிய காரணங்களால் சந்தையில் உள்ளூர் உருளைக்கிழங்கு, இறக்குமதி உருளைக்கிழங்கு, வேறு மாவட்ட உருளைக்கிழங்கு என விற்கப்படுவது மட்டுமல்லாமல், விலை வித்தியாசப்படும் தன்மை பரவலாக காணப்படுகிறது.

மொத்தத்தில் புகையிலை பயிர்ச் செய்கையை தடைசெய்து, புகையிலைக்கான மாற்றுப் பயிராக உருளைக்கிழங்கை அறிமுகப்படுத்துவது என்பது எமது விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் மண் அளிப்போடுவதாகவும், விதை உருளைக் கிழங்கு விற்பனை நிறுவனங்களுக்கு சந்தை ஒன்றை உருவாக்குவதாகவுமே அமையும். சமூக அக்கறையுடன் இந்த முடிவு எடுக்கப்படுவதாக இருந்தால், தடைசெய்யப்பட வேண்டியது புகையிலைப் பயிர்ச் செய்கையை அல்ல, வேறு பல பொருட்கள் உள்ளன தடை செய்ய.

புகையிலைப் பயிர்ச் செய்கைக்கு தடை வருமாக இருந்தால், அது ‘கள்’ இறங்குவதை தடை செய்ததைப் போலத்தான், பக்கசார்பானதாக, விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு எதிரானதாகவே அமையும்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 66

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*