சாதிப் பாகுபாடுகாட்டி மூளாய் சைவப்பிரசாக வித்தியாசாலை அராஜகம்!!

வடக்கின் கல்வி அதிகாரிகளின் அசமந்த தனமும் பாரபட்சமான நடவடிக்கைகாரணமாகவும் கடந்த 30 வருட காலமாக மூளாய் சைவப்பிரசாக வித்தியாசாலையில் கடமையாற்றும் பெண் அதிபரான சிவமலர் சர்வாதிகாரப் போக்குடன் நடந்து வருவதாகவும் இதனால் தமது பிள்ளைகளின் கல்விக்கான எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது –

வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கடந்த 30 வருடங்களாக கடமையில் இருக்கும் அதிபரின் எதேச்சதிகார செயற்பாட்டால் பாடசாலையைச் சூழவுள்ள கிராமங்கள் கல்வியில் பின்னடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதிபர் சிவமலரின் அராஜகத்தால் மூளாய் வேரம், முன்கோடை, தொல்புரம், மூளாய் பிள்ளையார் கோயிலடி போன்ற ஏற்கனவே பின்தங்கிய கிராமங்களே இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச மக்களும் அங்குள்ள சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.

1988.08.17 இல் பாடசாலையில் ஆசிரியையாக நியமனம் பெற்ற இவர் பின்னர் உப அதிபராகக் கடமையாற்றி 2005.04.12ஆம் திகதி  அப்பாடசாலையின் அதிபரான திருமதி சோதிலிங்கம் இளைப்பாறியதைத் தொடர்ந்து அதிபராக நியமிக்கப்பட்டார்.

கடந்த முப்பது வருட காலமாக இப்பாடசாலையில் கடமையாற்றுவதால் இவரிடம் சர்வாதிகாரப் போக்குத் தலைதூக்கியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆறு வருடங்களில் மூளாய் வேரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 25 மாணவர்களை இவர் விடுகைப் பத்திரங்களை வழங்கி பாடசாலையை விட்டுத் துரத்தியிருக்கின்றார். தொல்புரத்தில் கடந்த சில வருடங்களில் ஐந்து மாணவர்களும் முன்கோடையில் 5 இற்கும் மேற்பட்ட மாணவர்களும் பிள்ளையார் கோயிலடியில் 2010ஆம் ஆண்டுக்கு பின்னர் 8 மாணவர்களும் மேற்படி அதிபரால் பாடசாலையை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் 10, 11 ஆகிய தரங்களைச் சேர்ந்த இரு மாணவர்கள் துரத்தப்பட்டுள்ளனர். அவர்களின் பெற்றோர் அழுது மன்றாடியபோதிலும் அவர்கள் மீள இணைத்துக்கொள்ளாமல் வலுக் கட்டாயமாக விடுகைப் பத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மாணவர்களின் சிறு தவறுகளைக் காரணம் காட்டி அவர்கள் பாடசாலையை விட்டு, பாடசாலை நேரத்தில் துரத்தப்படுகின்றனர். அதிகமான மாணவர்கள் தரம் 10 மற்றும் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்றபோது வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில் இவர்கள் சிறுவர் தொழிலாளர்களாக மாறி இள வயதில் திருமணம் செய்திருக்கின்றனர். அவர்களில் பலர் மதுபோதைக்கு அடிமையானவர்களாக இருக்கின்றனர். குறித்த அதிபர் தமது மாணவர்களைச் சமூக ரீதியாக வேறுபடுத்தி பார்க்கின்றதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். இவர் தங்கள் பிரதேசத்தை திட்டமிட்டு கல்வியில் புறக்கணிக்கின்றார் எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இவரால் துரத்தப்பட்டு தற்போது இளைஞர்களாக உள்ளவர்களும் இதே குற்றச்சாட்டையே முன்வைக்கின்றனர். இப்பாடசாலையில் உளவளத் துணை ஆசிரியையாக இந்த அதிபரே கடமையாற்றுகின்றார். மாணவர்களுக்கு உளவளத்துணை வழங்குவதற்குப் பதிலாக அவர்களைக் கடுமையாகத் தண்டிக்கின்றார் எனவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் மாணவன் ஒருவனை அறைந்தமை, மற்றொரு மாணவனை கடுமையாகத் தாக்கியமை போன்ற சம்பவங்கள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் வரை சென்றிருந்தன. அதிபர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டார் என அந்த மாணவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

சுகயீனம் மற்றும் அவசிய தேவை கருதி பாடசாலைக்குச் செல்லாத மாணவர்கள் மறுநாள் செல்லும் போது துரத்திவிடப்படுகின்றனர். நியாயப்படுத்தக்கூடிய காரணங்கள் ஏதுமின்றி அவ்வப்போது மாணவிகளும் துரத்தப்படுகின்றனர்.

வீதியில் மாணவிகளுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களையும் கருத்தில் கொள்ளாமல் தமது பிள்ளைகளை தனிமையாக வீட்டுக்கு அனுப்பும்போது அவர்களுக்கு யார் பாதுகாப்பு என பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பாடசாலையில் நடைபெறும் பெற்றோர் – ஆசிரியர் சங்கக் கூட்டங்களின்போது ஏனையோரின் கருத்துக்கள் கேட்கப்படுவதில்லை எனவும் தான் கூறுபவற்றையே தீர்மானமாகத் திணிக்கின்றார் எனவும் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

இதனால் தாங்களும், ஆசிரியர்களும் மன உளைச்சல்களுக்கு ஆளாகின்றனர் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். கல்வி அதிகாரிகளால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியைகள் வன்னி போன்ற தூர இடங்களுக்குச் சென்று கல்வி கற்பிக்குமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பவதிகள் போன்ற ஆசிரியைகள்கூட மனிதாபிமானம் இன்றி தூரப் பிரதேசப் பாடசாலைகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.

இந்த நிலையில், மேற்படி அதிபர் ஒரே பாடசாலையில் தொடர்ச்சியாக முப்பது வருடங்கள் கடமையாற்றுவதற்கு அனுமதி வழங்கியது யார் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

இக்கேள்விக்கு, இதுவரை பதவியில் இருந்த சங்கானைக் கோட்டக் கல்வி, வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், மத்திய மாகாணக் கல்வி அமைச்சுக்களின் செயலாளர்கள் பதில் கூறவேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வலி.மேற்கு பிரதேச செயலாளர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் போன்றோரும் இந்த விடயத்தில் உரிய கவனம் செலுத்தவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை, மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக குறித்த பாடசாலை அதிபரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவற்றை அவர் முற்றாக மறுத்தார். தான் உரிய காரணம் இன்றி எந்த மாணவரையும் வெளியேற்றவில்லை என்றார். பொதுமக்களின் குற்றச்சாட்டுக்கள் உண்மையற்றவை எனவும் கூறினார்.

தான் உளவளத்துணை ஆசிரியை எனவும் அதற்கேற்பவே மாணவர்களை வழிப்படுத்துகின்றார் எனவும் கூறிய அவர், பெற்றோரின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்றார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சே… கல்வி சார் அதிகாரிகளே.. ஒரு பிரதேசத்தின் கல்வி குறித்த அதிபரின் அராஜகத்தால் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதை கண்டும் காணாதிராது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 450

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*