பண்ணைக்கடற்கரை கிடக்கிற கிட….

பண்ணைக்கடற்கரை கிடக்கிற கிட…. முதலில் கொஞ்கம் கூட்டிக் கீட்டி துப்பரவா வச்சிருங்கோ. பிறகு காசு கேக்கலாம்.

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையில் புகைப்படம் எடுப்பதற்கு கட்டணம் அறவிடப்படுகின்றது. நேற்று அங்கே புகைப்படம் எடுத்தவர்களிடம் கட்டணம் கோரப்பட்டுள்ளது. மின்சார சபையின் புண்ணியத்தால நேற்று வீட்டில இருக்கேலமல் போட்டுது. மதியம் வரை ஏதோ சமாளிச்சாச்சு. அதுக்கும் மேல ஏலாது. வெக்கை தாங்காமல் வெளிக்கிட்டு பண்ணைக்கு போயாச்சு. போறனாங்க சும்மா போவமா?

இருக்கேலாம கமறாவையும் தூக்கிக்கொண்டு போனம்.அங்க போனா முழுச்சனமும் அங்க தான் நிக்குது. ஒரு மாதிரி கொஞ்சம் தெரிஞ்ச முகங்கள் ஒண்டு சேர்ந்திட்டுது. பிறகென்ன கமராவை எடுத்து படம் எடுப்பம் எண்டு வெளிக்கிட அங்க வந்த பாதுகாப்பு ஊழியர் இங்க படமெடுக்கேலது எடுக்கிறெண்டா காசு கட்டவேணும் எண்டு தனக்கே உரித்தான வீரவசனத்தை எடுத்து விட்டார்.

எந்த வர்த்தக தேவைக்கோ அல்லது விளம்பரத்தேவைக்கோ எடுக்கவில்லை அண்ணா வந்தனாங்கள் எங்கட கமறாவை வச்சு படம் எடுக்கிறம் அதுக்கேன் காசு கட்ட வேணும் எண்டு கேட்டம். சொந்த கமறாவை கொண்டு வந்து எடுப்பதாக இருந்தாலும் சரி, சொந்த தேவைக்காக எடுத்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி நீங்கள் கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுக்கலாம் ஆனால் டியிற்ரல் கமறா கொண்டு வந்து எடுத்தால் காசு கட்ட வேண்டும். 250 ரூபாய் கட்ட வேண்டும் என்றார். வீடியோ எடுப்பதாக இருந்தால் இன்னும் அதிகமாம்.

எப்போதில் இருந்து இது நடைமுறையிலுள்ளது என கேட்டால் கடந்த 23ம் திகதியில் இருந்தாம். அறிவிப்பு பலகை எதுவும் வைக்காமல் இப்படி திடீரென வந்து தடுப்பது முறையல்ல என சொன்னதற்கு இனித்தான் அறிவிப்பு பலகை போடுவினமாம். செய்தியாக ஏதவது வந்ததா என கேட்டால் அதுவும் இல்லையாம் .அப்ப உங்களை நம்பி எப்படி காசு தாறது? ஒரு அலுவலகம் இல்லை ஒன்றும் இல்லை என்று கேட்டால்.

புனரமைப்புக்காக தான் இந்த கட்டணமாம். இப்போது கடற்கரையினை ரில்கோ விருந்தினர் விடுதிக்கு கொடுத்திருக்கிறார்களாம். அவர்களும் சில திருத்த வேலைகளை செய்கிறார்களாம் என்று அங்கே ஓடித்திரிந்து விளையாடும் சிறுவர்கள் தடக்கிவிழும் அளவுக்கு கிண்டப்பட்டிருக்கும் பெரிய குழிகளை காட்டுகிறார்.

அப்போது அடுத்த கேள்வி கேட்டேன். அப்ப எல்லாம் திருத்தி முடிய அவங்களே காசு வாங்கட்டுமன். இப்ப ஏன் அவசரப்படுறீங்கள். அதற்கு அவர் சொல்லுறார் தனக்கு சொல்லப்பட்ட வேலையை தான் செய்கிறாராம். நாக்களும் சொல்லிட்டம் படம் எடுப்போம் நீங்க என்ன செய்யேலுமோ செய்யுங்கோ… அதோட போய்டார்.

இல்ல தெரியாமல் தான் கேக்கிறன் மனுசர நின்மதியா ஒரு கடற்கரையில போய் இருக்கக்கூடி விடமாட்டீங்களோ?

கடற்கரையில நிண்டு படமெடுக்க நான் ஏன் உனக்கு காசு தர வேணும்?

எங்கேயும் இல்லாத கட்டணத்திட்டம் ஏன் இங்க மட்டும்?

இதில பண்ணைக்கடற்கரை கிடக்கிற கிட…. முதலில் கொஞ்கம் கூட்டிக் கீட்டி துப்பரவா வச்சிருங்கோ. பிறகு காசு கேக்கலாம்.

யாழ்ப்பாணத்தில இருக்கிறதே ஒரு சில இடம் தான் அதுக்கும் சனம் போகம பண்ணத்தான்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 179

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*