விஜயகலா கூறியது உண்மையே -வைகோ !!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியது தான், தமிழீழத்தின் உண்மை நிலை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை ஆதரித்து விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த தமிழ்ப் பெண்மணியான விஜயகலா அமைச்சராகப் பணியாற்றி வந்தார். இவரது கணவர் மகேஸ்வரன் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர். அவர் 2008 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

வடக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் அதிகரித்து விட்டன. சான்றாக, அண்மையில் ஒரு 6வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளது. கொள்ளை, வழிப்பறி, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், கொலைகள், நடைபெறுவதால் தமிழர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் எழுந்து வந்தால் தான் இந்தக் குற்றங்களைத் தடுக்க முடியும். தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியும்´´ என்று அமைச்சர் சொன்ன கருத்து தான் உண்மை நிலை ஆகும்.

ஆனால் நாடாளுமன்றத்தில் அமைச்சருக்கு எதிராக கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. எனினும் ஐக்கிய தேசியக் கட்சியினர், தங்கள் கட்சியின் சார்பில் அமைச்சர் பொறுப்பில் இருந்த ஒரே ஒரு தமிழரான விஜயகலாவுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்ததால், அவர் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.

இதிலிருந்து தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், தரணி வாழ் தமிழர்களும் ஒரு உண்மையை உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும். தேசியத் தலைவர் பிரபாகரனின் நேரடிக் கண்காணிப்பில் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் தமிழர் தாயகம் இருந்தபோது, மக்களுக்கு எதிராக குற்றங்கள் எவையும் நடைபெறவில்லை.

களவு, திருட்டு, மது, போதை, விபச்சாரம், கொலைகள், எதுவும் நடைபெறாமல் தமிழர்கள் நிம்மதியாக, பாதுகாப்பாக வாழ்ந்தனர். கலாச்சாரமும், பண்பாடும் பாதுகாக்கப்பட்டது.

ஆனால் இன்றோ நிலமை தலைகீழாக மாறிவிட்டது. இராணுவத்தினரும், பொலிஸாரும் இளைய தலைமுறையைப் பாழாக்க மதுவையும், போதைப் பொருளையும் திணிக்கின்றனர். குற்றங்கள் அதிகரித்துவிட்டன. தமிழர்கள் மிகுந்த அச்சத்தில் வாடுகின்றனர்.

விஜயகலா கூறியது தான் அங்குள்ள ஈழத் தமிழர்களின் எண்ணமும், உணர்வும் ஆகும். கிரேக்க புராணத்தில் சாம்பல் குவியலில் இருந்து பீனிக்ஸ் பறவை விண்ணில் எழுந்தது போல், தமிழீழ விடுதலைப் புலிகளும் மண்ணில் புதைந்த வித்துக்கள் விருட்சமாவதைப் போல இன்றைய இளைய தலைமுறையினர் புலிகளாக மாறி எழுந்து வருவார்கள்.

சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்வது வருங்காலத்தின் கட்டாயம். வரலாற்றில் எழுதப்படப் போகும் பாடம் ஆகும்´´ என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 222

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*